சிறுபழவேற்காடில் உப்பளம் அமைக்க கிராமவாசிகள் எதிர்ப்பு

பொன்னேரி:பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுபழவேற்காடு கிராமத்தில், இந்திய உப்பு நிறுவனம் சார்பில், 400 ஏக்கர் பரப்பில் உப்பளம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதற்கு சிறுபழவேற்காடு, ஆண்டார்மடம் உள்ளிட்ட அருகில் உள்ள கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நேற்று முன்தினம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அங்கு பணிகள் நடைபெறுவதை அறிந்த கிராம வாசிகள், நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர். பணிகளை தடுத்து நிறுத்தி, அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உப்பளம் அமைவதால் கிராமங்களில் நிலத்தடிநீர் மேலும் பாதிப்படையும், பறவைகளின் இருப்பிடங்கள் பாதிக்கும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராமவாசிகள் கூறியதாவது:

எங்கள் கிராமங்களில் ஏற்கனவே கடல் நீர் உட்புகுவது அதிகரித்து வருவதால், நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறி வருகிறது. இப்பகுதியில் உப்பளம் அமைந்தால் பாதிப்பு அதிகரிக்கும். அருகிலுள்ள விவசாய நிலங்களும் பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், 'கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement