சில வரி செய்திகள்...

மே தின கருத்தரங்கம்



மே தினத்தை முன்னிட்டு விழுதுகள் அமைப்பு சார்பில் வீரபாண்டியில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதன் நிறுவனர் தங்கவேல் தலைமை வகித்தார். திட்ட மேலாளர் சந்திரா பேசுகையில், பெண் தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பு, சம ஊதியத்துக்கான சட்ட உரிமைகள் குறித்து விளக்கினார்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வக்கீல் தமயந்தி, கவுரி ஆகியோர் தொழிலாளர் நலச் சட்டம்; முறையாக அதைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினர். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் சுதா வரவேற்றார். திட்ட மேலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

மரங்கள் வெட்டி சாய்ப்பு



'அரசு புறம்போக்கு நிலத்தில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது' என, பா.ஜ., நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். திருமுருகன்பூண்டி பா.ஜ., மண்டல தலைவர் சண்முகபாபு, பொருளாளர் மனோகரன், கிளை நிர்வாகி நாகராஜ் ஆகியோர் ராக்கியாபாளையம் வி.ஏ.ஓ.,விடம் வழங்கிய மனுவில், 'அம்மாபாளையம், கானக்காடு க.ச.எண்: 619ல், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள், மர்ம நபர்களால் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.

கிராம சபாவில் வேண்டுகோள்



மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அவ்வகையில், கண்டியன் கோவில் மற்றும் எஸ்.கத்தாங்கண்ணி ஊராட்சி கிராம சபாவில் பொதுமக்கள் அளித்த மனுவில், 'கடந்த ஓராண்டாக கிராமங்களில் வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் இறப்பது அதிகளவில் நடக்கிறது. பெரும் போராட்டங்களுக்குப் பின் இதற்கான இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு தொகையும், நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் உள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட இழப்பீடும் இதுவரை வழங்காமல் தாமதமாகிறது,' என குறிப்பிட்டுள்ளனர்.

மே தின கொண்டாட்டம்



பல்லடம் பா.ஜ., சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுடன் மே தின விழா கொண்டாடப்பட்டது. பல்லடம், செட்டிபாளையம் ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சீனிவாசன், செயலாளர்கள் செந்தில்வேல், வினோத் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மே தினத்தை முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு தொழிலாளர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பா.ஜ., மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பங்கேற்றனர்.

Advertisement