'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு ரூ.21 லட்சம் ஏமாற்றிய நபர் கைது

சென்னை,
கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சஜித், 55. அவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு சில மாதங்களுக்கு முன், குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதில் இருந்த லிங்கை தொட்டு, பார்த்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் அவரை மொபைல் போனில் அழைத்துள்ளார்.

அந்த மர்ம நபர், 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நினைத்த சஜித், பல தவணையாக, 17.10 லட்சம் ரூபாயை, அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சஜித், பிப்., 27ல் கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதேபோல், அயனாவரத்தைச் சேர்ந்த சித்ரா, 44, என்பவரும் 'ஆன்லைன்' வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறியதை நம்பி, 4,58 லட்சம் ரூபாயை, இழந்துள்ளார். இவரும், கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இப்புகார்களை விசாரித்த போலீசார், மர்ம நபரின் வங்கி கணக்குகள், மின்னஞ்சல் முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை வைத்து விசாரித்தனர்.

இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசன், 40, என்பவர், மேற்கண்ட இருவரிடமும் நைசாக பேசி, மோசடி வலையில் வீழ்த்தியது தெரிந்தது.

நேற்று, அவரை கைது செய்த போலீசார், மொபைல் போன், எட்டு வங்கி கணக்கு புத்தகங்கள், இரண் காசோலை புத்தகம், ஒன்பது வங்கி சேமிப்பு அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement