சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு நிதியுதவி

1

சென்னை:சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் ஈடுபட்டுள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு நிதியுதவி அளிக்கிறது.

இதுகுறித்து, அரசு செய்திக்குறிப்பு:

காலநிலை மாற்றத்தால் பூமிக்கும், பூமியில் வாழும் உயிரினங்களுக்கும், அவற்றின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. எனவே, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிக்கவும், காலநிலை மீள்திறனை வளர்த்தெடுக்கவும் அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது.

இச்சவால்களை எதிர்கொள்ள, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை ஆற்றல், வள சுரண்டலை தடுக்க சுற்றுச்சூழல் - மாற்று தீர்வுகள், காலநிலை நிதி மற்றும் நிலையான தொழில்நுட்பங்களுக்கு பங்கு அளிக்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, ஆதரித்து வளர்த்தெடுக்க, 'சஸ்டெய்ன் டி.என்' எனும் முன்னெடுப்பு, 2024 - 25ல் காலநிலை மாற்ற துறையால் அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழக காலநிலை மாற்ற இயக்கமானது, அண்ணா பல்கலை மற்றும், 'ஸ்டார்ட்அப்' டி.என்., நிறுவனத்துடன் இணைந்து, மேற்கூறிய துறைகளில் சிறப்பாக செயல்பட கூடிய வகையில் உள்ள, 10 புத்தொழில் நிறுவனங்கள், புத்தொழில் கருத்துருக்கள் அடையாளம் காணப்பட்டு, அவை வணிகத்தை விரிவுபடுத்த, 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுவதுடன், சந்தை வாய்ப்புகளும் உருவாக்கி தரப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள், 'www.sustaintn.com' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான அவகாசம் வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement