கோவா அணி சாம்பியன்: சூப்பர் கோப்பை கால்பந்தில்

புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் கோவா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 3-0 என, ஜாம்ஷெட்பூரை வென்றது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், சூப்பர் கோப்பை கால்பந்து 5வது சீசன் நடந்தது. கலிங்கா மைதானத்தில் நடந்த பைனலில் கோவா, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கோவா அணியின் போர்ஜா ஹெர்ரெரா கான்சலஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, ஜாம்ஷெட்பூர் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் கோவா அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய கோவா அணிக்கு போர்ஜா ஹெர்ரெரா (51வது நிமிடம்), டெஜான் டிராசிக் (72வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய ஜாம்ஷெட்பூர் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக சூப்பர் கோப்பை வென்றது. இதற்கு முன், 2019ல் சாம்பியன் ஆனது. இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது. பெங்களூரு (2018), ஒடிசா (2023), ஈஸ்ட் பெங்கால் (2024) தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றன.