வைப்பதோடு சரி அகற்றுவதில்லை சாலையோர பேனர்களால் எரிச்சல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், கோவில் திருவிழா, காதணி, வளைகாப்பு, திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக முக்கிய சாலையோரங்கள், அணுகுசாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள், பல மாதங்களாகியும் அகற்றப்படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தின் பிரதான வழித்தடமாக உள்ள ஜி.எஸ்.டி., சாலையிலும், உட்புற ஊராட்சிப் பகுதி சாலையோரங்களிலும், கடந்த இரு ஆண்டுகளாக பேனர்கள் அதிக அளவில் வைக்கப்படுகின்றன.
கடந்த பிப்., 24ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி, அ.தி.மு.க.,வினர் சார்பில், ஜி.எஸ்.டி., சாலை உட்பட செங்கல்பட்டு மாவட்டம் முழுதும், 200க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன.
இதையடுத்து மார்ச் 1ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க.,வினரும் போட்டிபோட்டு, பேனர்களை வைத்தனர். மாவட்டம் முழுதும் 500க்கும் மேற்பட்ட பேனர்கள், நடைபாதை மற்றும் வாகன வழித்தடங்களை மறித்து வைக்கப்பட்டன.
இந்த பேனர்கள் பல மாதங்களைக் கடந்தும் அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாலையோர கடைக்காரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் பேனர் கலாசாரம், அச்சத்தை தருகிறது. உட்புற பகுதி மட்டுமல்லாது, வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள ஜி.எஸ்.டி., சாலையிலும், இரு கட்சியினரும் போட்டி போட்டு பேனர்களை வைக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் முடிந்து 65 நாட்கள் முடிந்து விட்டன. ஆனால், விளம்பர பேனர்கள் தற்போது வரை அகற்றப்படாமல் இருப்பது, அக்கட்சியினரின் மக்கள் விரோத போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.
தண்ணீர் பந்தல் திறப்பு, கட்சி விழாக்கள், நிகழ்ச்சிகள் என, அனைத்திற்கும் பேனர் வைக்கும் கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தவிர, பொது மக்களும் கோவில் திருவிழா, பிறந்தநாள், காது குத்துதல், திருமணம் என, தங்கள் பங்கிற்கு பேனர்களை வைப்பது அதிகரிக்கிறது.
இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, விழா முடிந்தும் அகற்றப்படுவதில்லை. காற்று, மழையால் அழியும் வரை, அந்த இடங்களில் மாதக் கணக்கில் இருந்து வாகன ஓட்டிகள், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர்களுக்கு, அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.