மலை உச்சியில் தண்ணீர் பருகிய யானைகள்

பந்தலுார் : பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதி சாமியார் மலை உச்சியில், யானைகள் தண்ணீர் பருகி சென்றது.
பந்தலுார் அருகே அய்யன்கொல்லி பகுதியில் சாமியார் மலை அமைந்துள்ளது. மிக உயரமான மலை பகுதியான இங்கு, சிவன் கோவில் அமைந்து உள்ளது.
ஜன., முதல் தேதி இங்கு திருவிழா நடைபெறும் நிலையில், மற்ற நாட்களில், இந்தப் பகுதியில் யானைகள் முகாமிடுவதால், மக்கள் யாரும் இங்கு அதிக அளவில் செல்வதில்லை. இங்கு சுவாமி ஒருவர் மட்டுமே, தங்கியிருந்து பூஜைகள் செய்து வருகிறார்.
ஆனால், மலை உச்சியில் உள்ள சிறிய குழியில், வற்றாத தண்ணீர் உள்ளது. திருவிழா நாட்களில் சமைக்கவும், பக்தர்களுக்கு பிரசாதமாகவும் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இங்கு முகாமிட்டுள்ள யானைகள் மலை உச்சிக்கு வந்து தண்ணீரை குடித்து வருகின்றன. சம தளமான பகுதியில், தண்ணீர் வற்றி வறட்சி நிலவும் நிலையில், சிவன் கோவில் அமைந்துள்ள மலை உச்சியில் வற்றாத தண்ணீர் வன விலங்குகளின் தாகத்தை தணித்து வருகிறது.