50 ஆண்டு சாலை பிரச்னைக்கு 'விடிவு' பூமி பூஜை போட்டு பணி தொடக்கம்

பனமரத்துப்பட்டி,:

பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி, தொட்டிய தெருவில், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். சேலம் - பனமரத்துப்பட்டி சாலை கந்தபிள்ளையார் கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து, தனியார் பட்டா நிலம் வழியே, தொட்டிய தெருவுக்கு மண் பாதை செல்கிறது. இதனால் ஊராட்சி மூலம் தார்ச்சாலை அமைக்க முடியாத நிலை இருந்தது.


இரு ஆண்டுக்கு முன், தொட்டிய தெரு அருகே, தனியார் வீட்டுமனைகள் விற்பனைக்கு பிரிக்கப்பட்டன. ஊராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலம், மக்கள் பயன்பாட்டுக்கு சாலை அமைக்க நிலம் ஒதுக்கும்படி, அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் பேச்சு நடத்தினார். இதனால், 30 அடி அகலத்தில், 600 மீ., நீளத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கு, 1.50 லட்சம் ரூபாய், சொந்த பணத்தை செலவிட்டு, ஊராட்சி பெயரில் நிலத்தை பதிவு செய்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம், பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. அத்துடன் ஆழ்துளை குழாய் கிணறு, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு என, 37 லட்சம் ரூபாயில் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதன்மூலம், 50 ஆண்டு கால சாலை பிரச்னைக்கு விமோசனம் கிடைத்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூஜையில், முன்னாள் தலைவர் வெங்கடாசலம், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வின் துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், ஊராட்சி செயலர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் ஈசன் நகர், ராஜாராம் காலனி, வால்மீகி நகர் உள்ளிட்ட இடங்களில், சிமென்ட் சாலை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

Advertisement