வக்ப் சொத்து என கூறி முடக்கப்பட்ட பதிவு தடை நீக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

பழநி,:திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் பகுதியில் வக்ப் வாரிய சொத்து என கூறி தடை விதிக்கப்பட்டிருந்த பகுதிக்கு தடை விலக்கி நேற்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

பழநி பாலசமுத்திரம் பகுதிகளில் 92 ஏக்கரில் உள்ள சர்வே எண்கள் வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டது. பத்திரப்பதிவு செய்ய முடியாமல் முடக்கப்பட்டன. இதனால் சொத்து விற்பனை, பாகப்பிரிவினை, உயில் பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. வங்கிகளில் கடன் பெறவும், அடமானம் வைக்க முடியாதும் தவித்தனர்.

இந்நிலையில் இப்பகுதியில் சில சர்வே எண்களுக்கு பத்திரப்பதிவு செய்ய அனுமதியளித்து பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார். அதில், பழநி பதிவு மாவட்டம் இணை சார் பதிவகம்1ல் பாலசமுத்திரம், நத்தம் புறம் எண் 51/1ஏ சொத்துக்களை பதிவு மேற்கொள்ள வக்ப் வாரியத்திடம் இருந்து ஆவணம் எதுவும் பெறப்படவில்லை. வக்ப் வாரியம் சார்பில் தங்களுக்கு சொந்தம் என நிரூபிக்கும் ஆவணங்கள் தாக்கல் செய்யாத சர்வே எண்களுக்கு தனிநபர் பெயரில் பட்டா மாற்ற, சொத்துக்களுக்கான ஆவண பதிவுகளுக்கு தடை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து சில இடங்களுக்கு நேற்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement