பிளாக் அவுட் பயிற்சியில் இந்திய ராணுவம்; அச்சத்தில் பாகிஸ்தான்

சண்டிகர்: பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பஞ்சாப்பில் இந்திய ராணுவம் பிளாக் அவுட் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியா, நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று அறிவித்துள்ளது.
எனவே, இந்திய ராணுவத்தினர் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டது. அதேபோல, கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையான 'அப்தலி'யை பாகிஸ்தான் பரிசோதித்தது. இது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூரில் உள்ள இந்திய ராணுவ பிரிவினர், பிளாக் அவுட் எனப்படும் இருள்நேரப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது.
இரவு 9 மணி முதல் 9.30 மணி வரையில் சுமார் அரை மணிநேரம், கடும் இருள் சூழ்ந்த வேளையில் இந்திய ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டனர். இது பாகிஸ்தானுக்கு எதிரான போருக்கு இந்திய ராணுவத்தினர் தயாராவதாகவே பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த பயிற்சியின் போது, பொதுமக்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள லைட்டுகளை எரிய விட வேண்டாம் என்று அதிகாரிகள் ஒலிபெருக்கியின் மூலம் கேட்டுக் கொண்டனர்.