நஷ்டம் யாருக்கு?

'ஆளும் கூட்டணிக்குள் நடக்கும் முட்டல், மோதல்கள் எப்போது எரிமலையாக வெடித்து சிதறும் என தெரியவில்லை...' என்கின்றனர், மஹாராஷ்டிர மாநில அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.
கடந்த முறை முதல்வராக பதவி வகித்த ஏக்நாத் ஷிண்டே, தற்போது தனக்கு அந்த பதவி கிடைக்காததால், தேவேந்திர பட்னவிஸ் மீது அதிருப்தியில் உள்ளார்; இதை அவ்வப்போது தன் பேச்சின் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தான், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரவீன் என்பவரை, மஹாராஷ்டிர மாநில தலைமை பொருளாதார ஆலோசகராக நியமித்துள்ளார் பட்னவிஸ்.
அஜித் பவார், நிதி அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில், தன் துறை தொடர்பான பொருளாதார ஆலோசகர் பதவிக்கு, தன் கருத்தை கேட்காமலேயே ஒரு அதிகாரியை நியமித்தது, அவருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'எங்களை, 'டம்மி'யாக்க நினைக்கிறார், பட்னவிஸ். நாங்களும் ஒரு காலத்தில் மஹாராஷ்டிராவை ஆட்டிப் படைத்தவர்கள் தான். கூட்டணி கட்சிகளை அவமதிப்பதை பட்னவிஸ் குறைத்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவருக்கு தான் நஷ்டம்...' எனக் குமுறுகின்றனர், அஜித் பவார் ஆதரவாளர்கள்.