சிறுவயது கனவை நனவாக்க லாரி ஓட்டும் ஜோதி

பெங்களூரு நாயண்டஹள்ளியில் லாரிகளுக்கான முனையம் உள்ளது. அங்கு சென்று பார்த்தால் பல மாநிலங்களின் லாரிகள் நிறுத்தப்பட்டு இருக்கும். டிரைவர்கள் ஜாலியாக அரட்டை அடித்து பேசி கொண்டு இருப்பர். ஆண் டிரைவர்கள் கூட்டத்திற்கு மத்தியில் ஒரே ஒரு பெண் டிரைவரையும் அங்கு காணலாம்.
அந்த பெண் டிரைவர் பெயர் ஜோதி, 41. பெங்களூரை சேர்ந்தவர். கடந்த 2017ம் ஆண்டு முதல் லாரி ஓட்டுகிறார். தன் லாரி டிரைவர் பயணம் குறித்து ஜோதி கூறியதாவது:
எனக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் பரசிவமூர்த்தி. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே லாரி ஓட்ட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. 18 வயதுக்கு பின்னர் முதலில் கார் ஓட்ட ஓட்டுநர் உரிமம் எடுத்தேன். பின் கனரக வாகனங்கள் ஓட்டும் பயிற்சி பெற்று, அதற்கும் உரிமம் எடுத்தேன்.
சிறுவயது ஆசையை கணவரிடம் கூறினேன். எனது விருப்பத்தின்பேரில் கடந்த 2011ல் ஒரு லாரி வாங்கினார். அதற்கு 30க்கும் மேற்பட்ட டிரைவர்களை நியமித்தோம். ஆனால் யாருமே சரியாக வேலை செய்யவில்லை. லாரியில் லோடு ஏற்றி செல்லும் போது நிறைய குளறுபடி செய்து, எங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தினர்.
இதனால் எனது கணவருக்கு லாரி ஓட்ட பயிற்சி கொடுத்தேன். ஆனால் அவரால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி கடந்த 2014 முதல் நானே லாரியை ஓட்ட ஆரம்பித்தேன். முதன் முதலாக நாயண்டஹள்ளியில் இருந்து ஹுடி தொழிற்பேட்டை பகுதிக்கு இரும்பு பொருட்களை ஏற்றி சென்றேன். தற்போது மங்களூரு, மைசூரு, ஹாசன், தாவணகெரே உட்பட மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கு பெங்களூரில் இருந்து பொருட்களை லாரியில் கொண்டு செல்கிறேன்.
நெடுஞ்சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்கிறேன். ஒரு சில டிரைவர்கள் தவிர மற்ற ஆண் டிரைவர்கள் என்னை ஆதரித்து பாராட்டுகின்றனர். இது எனக்கு உத்வேகமாக உள்ளது. போக்குவரத்து போலீசாரும் எனக்கு நிறைய உதவி செய்து உள்ளனர். இரவில் லாரி ஓட்டுவது சவாலாக இருக்கும். ஆனால் எனக்கு அது பிடித்து இருக்கிறது.
துாக்கம் வருவது போன்று இருந்தால் பாதுகாப்பான இடத்தில் லாரியை ஓரம் கட்டி விட்டு துாங்கி விடுவேன். லாரி டிரைவர்கள் பல சவால்களை சந்திக்கின்றனர். அவர்களுக்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.