பஸ் நிலையத்தில் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தை வட்டமிடும் ஆட்டோக்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள பிரதான சாலைகளில் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புடன் நீண்ட துாரத்திற்கு பைக்குகளும் நிறுத்தப்படுகின்றன.

தள்ளுவண்டி கடைக்காரர்களின் அணிவகுப்பினாலும் சாலைகள் சுருங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கள்ளக்குறிச்சி பஸ் நிலைய நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கடைக்காரர்களின் அணிவகுப்பால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது.

அத்துடன் பஸ் நிலையத்தை சுற்றிலும்,10க்கும் மேற்பட்ட ஆட்டோக்காரர்கள், பயணிகளை ஏற்றி செல்ல ஒரே சமயத்தில் குவிவதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் விழிபிதுங்கி நிற்கும் நிலை உள்ளது. அப்பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாரும் இதனை கட்டுப்படுத்தாமல் உள்ளனர்.

போலீஸ் தரப்பில் நகருக்குள் பல இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைத்திருப்பினும் அதனை பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement