இன்று வணிகர் மாநாடால் கடைகள் அடைப்பு சேலத்தில் 3 சங்க வியாபாரிகள் புறக்கணிப்பு

சேலம்: மே, 5ல் வணிகர் தினத்தையொட்டி, சென்னையில் தமிழக வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் மாநாடு, இன்று நடக்கிறது. இதற்கு வணிகர்கள், கடைகளை அடைத்து, மாநாட்டில் பங்கேற்கின்றனர்.


இதுகுறித்து, சேலம் மாவட்ட மளிகை வியாபாரிகள் சங்க பொருளாளர், செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் மளிகை வர்த்தகர் சங்கத்தலைவர் செல்வகுமார் கூறியதாவது: வணிகர்கள் மாநாடு என்பது, வியாபாரிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் மாநாடாக நடத்த வேண்டும். சில ஆண்டாக ஆளுங்கட்சியினரை அழைத்து, அவர்களுக்கு நடத்தும் பாராட்டு விழா போன்று மாறிவிட்டது. இதுகுறித்து மாநில பொதுக்குழு, மாவட்ட செயற்குழு கூட்டங்களில் பலமுறை முறையிட்டும், சங்க முக்கிய நிர்வாகிகள், போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.இதனால் பேரமைப்பில் உள்ள செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் மளிகை வர்த்தகர் சங்கம், செவ்வாய்ப்பேட்டை தாவர எண்ணெய் வியாபாரிகள் சங்கம், கருங்கல்பட்டி வியாபாரிகள் சங்கம் ஆகிய கிளை சங்கங்களின், 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், மாநாட்டை புறக்கணிப்பதோடு, வழக்கம்போல் கடைகளை திறந்து வியாபாரம் செய்வர். மற்றபடி பேரமைப்பு அறிவிக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement