மரத்தில் ஆணிகள் அடித்து வைக்கும் பதாகைகளால் பாதிப்பு; பட்டுப்போவதை தடுக்குமா பசுமைக்குழு நடவடிக்கை

மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் மக்களிடத்தில் சந்தைப்படுத்த, விளம்பர பதாகைகளை தயார் படுத்துகின்றனர். மக்கள் கண்ணில் எளிதில் படும் வகையில் ஆங்காங்கே விளம்பர பலகைகள் வைக்கின்றனர்.

மக்களிடத்தில் விளம்பரம் சென்று சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் பணியாளர்கள் களம் இறங்குகின்றனர். அதற்காக ரோட்டோரம் உள்ள மரங்களை தேர்வு செய்கின்றனர். நரிக்குடி - பார்த்திபனூர் ரோடு, காரியாபட்டி - அருப்புக்கோட்டை -- மதுரை - கள்ளிக்குடி ரோடு என ஒரு இடங்கள் கூட விட்டு வைக்கவில்லை. பெரும்பாலும் 40, 50 ஆண்டுகள் பழமையான புளிய மரங்கள், புங்கை, வாகை உள்ளிட்ட மரங்கள் ரோட்டோரங்களில் உள்ளன.

இதில் விளம்பர பதாகைகளை தொங்கவிட ஆணி அடிக்கின்றனர். சிலர் பதாகைகளை கம்பியால் கட்டுகின்றனர். எது எப்படியோ, மரத்தை சேதப்படுத்தி தங்களை சந்தைப்படுத்த, விளம்பரப் பதாகைகளை தொங்க விடுகின்றனர்.

நாளடைவில் மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி வழியாக காற்று புகுந்து, மழைநீர் கசிவு ஏற்பட்டு மரம் பாதிப்படைந்து பட்டு போகும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. மரங்களின் ஆயுட்காலம் குறைவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரோட்டோரத்தில் இருந்த பெரும்பாலான மரங்கள் ரோடு விரிவாக்கம், சரிவர பராமரிப்பு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

அவ்வாறு இருக்க தற்போது மரங்களிலும் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை தொங்க விடுவது எதிர்காலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை கண்காணித்து, தடுக்க வேண்டியது அவசியமாகிறது. ஆணி அடித்து விளம்பர பதாகைகளை தொங்க விடும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Advertisement