கடலுாரில் மீன் அருங்காட்சியகம்; அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல்

கடலுார்; கடலுார் மாநகராட்சி சார்பில் 8.63 கோடி ரூபாய் மதிப்பில் மீன் அருங்காட்சியகம், தேவனாம்பட்டிணம் பீச்சில் நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்.பி., விஷ்ணுபிரசாத், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.

பின், அவர் கூறியதாவது: கடலுார் சுப்பராயலு பூங்காவில் பல்வேறு மீன் வகைகளை பார்வையிடவும், தேவனாம்பட்டிணம் பீச்சில் பொழுதுபோக்கு சிறப்பம்சங்களுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சுப்புராயலு பூங்காவில் பொதுமக்கள் வருகையை அதிகரிக்கவும், சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்கவும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடக்கிறது.

சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக உள்ளது. இங்கு, வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் 4.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், அழகிய நடைபாதை உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. நீலக்கொடி திட்டத்தின் கீழ் 4 கோடி ரூபாய் மதிப்பில் வாட்ச் டவர், மணல் சுத்தம் செய்யும் இயந்திரம், ஜாகிங் டிராக், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட சிறப்பமசங்களுடன் கடற்கரையை மேம்படுத்தும் பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். துணை மேயர் தாமரைச்செல்வன், செயற்பொறியாளர் கோவிந்தராஜ் பங்கேற்றனர்.

Advertisement