குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதியில் குடிநீர் சப்ளையின் போது குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாக செல்வதால் கழிவுகள் கலக்கும் அபாயம் உள்ளது.

தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செண்பகத்தோப்பு பேயனாறு, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு குடிநீர் சப்ளை செய்யப்படும்போது குழாய்கள் செல்லும் வழித்தடப்பாதைகளான கோட்டைப்பட்டி விலக்கு, கம்மாபட்டி, மாதாங்கோவில் தெரு, ஆத்துக்கடை உட்பட பல்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. மேலும் பல இடங்களில் கழிவுநீர் வாறுகால்கள் அருகே குடிநீர் வால்வுகள் இருப்பதால் குடிநீருடன் கழிவுகள் கலக்கும் அபாயம் உள்ளது.

குழாய் உடைப்பு ஏற்படும் இடங்களில் மீண்டும் பிளாஸ்டிக் குழாய்களையே பயன்படுத்தி ஓட்டு போடுவதால் மீண்டும் அழுத்தம் தாங்காமல் குழாய்கள் உடைந்து விடுகிறது. எனவே, அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பை தவிர்க்க நிரந்தர தீர்வு காணும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement