பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தும் திறக்காததால் பயணிகள் சிரமம்

ராஜபாளையம் : ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிந்துள்ள நிலையில் அமைச்சரின் தேதிக்காக திறப்பு விழா காத்திருக்கிறதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜபாளையம் நகர் நடுவே செயல்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடம் சேதமடைந்ததால் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடிக்கு 2023 ஜன. மாதம் பணிகள் துவங்கியது.இதனால் கிராமங்களுக்கு சென்று வரும் பஸ்கள் மகப்பேறு மருத்துவமனை முன்பிருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகிறது. பழைய கட்டடம் இடிக்கப்பட்டு இரண்டு ஓட்டல்கள், புறக்காவல் நிலையம், சுகாதார வளாகம், 27 வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளது.

பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்து பணிகள் முடிந்துள்ள நிலையில் செயல்பாட்டிற்கு வராததால் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சட்டசபை தொடரில் எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் பஸ் ஸ்டாண்ட் திறப்பிற்கு அமைச்சரின் வருகை தேதி கேட்டார். தேதி கிடைக்காததால் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா தள்ளிப் போகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

ஏற்கனவே பஸ் ஸ்டாண்ட் முன்பு தினமும் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இருக்கை, கழிப்பறை, மழை வெயிலிலிருந்து ஒதுங்க வசதி இல்லை. எனவே பயணிகள் நலன் கருதி முடிவடைந்துள்ள பழைய பஸ் ஸ்டாண்டை விரைந்து திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement