பாகிஸ்தான் ராணுவத்தை புரட்டி அடிக்கும் பலுச் விடுதலை ராணுவம்!

7

கராச்சி: தனி நாடு கோரி போராடி வரும் பலுச் விடுதலை ராணுவத்தினர், (பி.எல்.ஏ.,), பாகிஸ்தான் ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். இங்கு எண்ணெய் வளம் அதிகம்.இங்கு பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் மீது ஓரவஞ்சனையாக நடந்து கொள்ளும் பாகிஸ்தான் மத்திய அரசு, பலுாச் இன மக்களை அடக்கி, அச்சுறுத்தி ஆண்டு வருகிறது.

இதனால், பலுசிஸ்தான் என்ற பெயரில் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு போராளிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பலுச் விடுதலை ராணுவம் என்ற போராளிக்குழு முக்கியமானது. ராணுவம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் மீதும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த ஒரு மாதம் முன்னதாக, ரயிலை கடத்திய இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், போலீசார், ராணுவ வீரர்கள் என பலரை சுட்டுக்கொன்றனர். தற்போது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கவனம் செலுத்தி வரும் நிலையில், பலுச் விடுதலை ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.
நேற்று இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், கலாட் மாவட்டத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். குவெட்டா - கராச்சி தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அங்கு அமைந்துள்ள, வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.


ஆயுதம் தாங்கிய போராளிகள், தேசிய நெடுஞ்சாலையில் வவந்த அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். வாகனங்களில் வந்த மக்களிடம், 'சுதந்திரத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும். இதை உங்கள் பாகிஸ்தான் அரசிடம் சொல்லுங்கள்' என்று கூறினர்.இதேபோல, குவெட்டா பகுதியில் அமைந்துள்ள கடானி சிறையை தாக்கிய பலுச் விடுதலை ராணுவத்தினர், அங்கிருந்த 10 போராளிகளை விடுவித்தனர். போலீசார் 5 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச்சென்றனர்.


பலுச் விடுதலை ராணுவத்துக்கு ஆதரவாகம், பாகிஸ்தானுக்கு எதிராகவும், உலகின் பல்வேறு நாடுகளில் பலுச் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நெதர்லாந்தில் பலுச் விடுதலை இயக்கம் சார்பில், தங்கள் இன மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அத்துமீறல் தொடர்பான போட்டோ கண்காட்சி நடந்தது. தங்கள் இனம் மீது நடத்தப்படும் தாக்குதலை சர்வதேச சமுதாயம் கண்டிக்க வேண்டும் என்று, கண்காட்சியை நடத்திய பலுச் இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.


பலுச் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் மக்கள் சித்ரவதைக்கு ஆளாவதாகவும், லாக்கப்பில் வைத்து கொல்லப்படுவதாகவும், அவர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு தனி நாடு ஒன்றே தீர்வு என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Advertisement