நார்வே வீரர் சாதனை: மாட்ரிட் ஓபன் டென்னிசில்

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் நார்வேயின் காஸ்பர் ரூட் கோப்பை வென்று சாதனை படைத்தார்.
ஸ்பெயினில், 'மாஸ்டர்ஸ் 1000' அந்தஸ்து பெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நார்வேயின் காஸ்பர் ரூட், பிரிட்டனின் ஜாக் டிராப்பர் மோதினர். முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய ரூட், இரண்டாவது செட்டை 3-6 என இழந்தார். பின் எழுச்சி கண்ட இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என வென்றார்.
இரண்டு மணி நேரம், 29 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரூட் 7-5, 3-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 'மாஸ்டர்ஸ் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் கோப்பை வென்ற முதல் நார்வே வீரர் என்ற சாதனை படைத்தார். தவிர இது, இவரது 13வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம் ஆனது.
தரவரிசையில் முன்னேற்றம்: மாட்ரிட் ஓபனில் கோப்பை வென்ற காஸ்பர் ரூட், ஏ.டி.பி., ஒற்றையர் தரவரிசையில் 15வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார். பைனல் வரை சென்ற ஜாக் டிராப்பர், ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை கைப்பற்றினார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் இத்தாலியின் ஜானிக் சின்னர் நீடிக்கிறார்.
பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் தரவரிசையில் பெலாரசின் சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். மாட்ரிட் ஓபனில் பைனல் வரை சென்ற கோகோ காப் 3வது இடத்துக்கு முன்னேறினார். மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து அமெரிக்காவின் 'நம்பர்-1' வீராங்கனையானார் கோகோ காப்.