ப.வேலுாரில் குட்கா விற்பனை அதிகரிப்புகட்டுப்படுத்த கோரி வர்த்தக சங்கம் தீர்மானம்


ப.வேலுார்:-'ப.வேலுாரில் குட்கா மற்றும் பிளாஸ்டிக் விற்பனை அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும்' என, நகர அனைத்து வர்த்தக சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் நகர அனைத்து வர்த்தக சங்கம் சார்பில், 55ம் ஆண்டு விழா மற்றும் 42ம் ஆண்டு வணிக தின விழா, நேற்று வர்த்தக சங்க மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார்.
விழாவில், அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவியருக்கு, வர்த்தக சங்கம் சார்பில் பரிசு வழங்கினர். தொடர்ந்து, 2025ம் ஆண்டுக்கான அறிக்கையை செயலாளர் சாமிநாதன் வாசித்தார்.
முக்கிய நிகழ்வாக, வர்த்தக சங்கம் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பிளாஸ்டிக் பைகள், வெளிமாநிலத்தில் இருந்து ப.வேலுாருக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.
அவற்றை கட்டுப்படுத்த, அதிகாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்க, பிரதான சாலையில் ஆங்காங்கே குழிபறித்து குழாய் பதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் செப்பணிடாததால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
சரக்குகளை கொண்டு வரும் லாரி, மினி ஆட்டோ வாகனங்களிடம், டவுன் பஞ்., நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர்.
இதுகுறித்து டவுன் பஞ்., அலுவலகத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சுங்க கேட் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement