வணிகர் தினத்தில் 5,-000 கடைகள் அடைப்பு
நாமக்கல்:
வணிகர் தினமான நேற்று, நாமக்கல் மாவட்டத்தில், 5,000 கடைகள் அடைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும், மே, 5ல் வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வணிகர் தினத்தையொட்டி, மதுராந்தகத்தில், 'வணிகர் உரிமை மீட்பு' மாநாடு நடந்தது. இதை முன்னிட்டு, 'மே, 5ல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை
அளித்து, வியாபாரிகள் குடும்பத்துடன் மதுராந்தகம் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என, பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதையொட்டி, நாமக்கல் நகரில் உள்ள ஜவுளிக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, ஹார்டுவேர்ஸ், பெயின்ட், எலக்ட்ரிகல் கடை, மொபைல் போன், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மருந்துகடை, ஓட்டல், பால் பூத்து மட்டும் செயல்பட்டன. அதேபோல், மோகனுார், சேந்தமங்கலம், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வணிகர் தினத்தையொட்டி, 5,000 கடைகள் மூடப்பட்டிருந்தன.