முன்னாள் டிஜிபி வீட்டில் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

தென்காசி: தமிழக போலீஸ் முன்னாள் டி.ஜி.பி., ராஜேந்திரன் பூர்வீக வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தென்காசி புளியங்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே, ஓய்வு பெற்ற தமிழக டிஜிபி ராஜேந்திரனின் பூர்வீக வீடு உள்ளது. அதில்அவரது உறவினர் அமிர்தராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் ரேகாவுடன் தனது சொந்த ஊரான விஸ்வநாதபேரிக்கு பெற்றோரை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அமிர்தராஜ் வேலைக்காக வெளியே சென்றிருந்தார். அவரது மகன் பூவேந்திர பொன்ராஜ் 14, மட்டுமே வீட்டில் இருந்தார்.
இன்று பகல் 3:00 மணியளவில், முகமூடி அணிந்த இருவர், வீட்டு பின்வாசல் கதவை திறந்து உள்ளே நுழைந்தனர். சிறுவனை மிரட்டி, கைகளை துண்டால் கட்டி, வாயில் துணியை திணித்தும் கூச்சலிடாமல் செய்தனர். பின் பீரோ சாவியை தரக் கூறி மிரட்டியதால் பயந்த சிறுவன் சாவியை கொடுத்தான்.

சற்று நேரத்தில் வீடு திரும்பிய ராஜேஸ்வரி, மகனை கட்டிப்போட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகிலுள்ளவர்கள் மற்றும் கணவருக்கு தகவல் தெரிவித்தனர்.புளியங்குடி இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் தலைமையில் போலீசார் விசாரித்தனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் சாலையோர கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். விரல்ரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.
இருவர் முகமூடி அணிந்து வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கணக்கிட்டு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பஸ் ஸ்டாண்ட் அருகே, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளை நடந்தது போலீசாருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.