மண்ணெண்ணெய் சப்ளை இல்லாமல் ரேஷன் கார்டுதாரர்கள் அவதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகாவில், 190 ரேஷன் கடைகள் வாயிலாக, 1 லட்சத்து, 23,611 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அட்டையின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், காஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாதவர்களுக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில், மண்ணெண்ணெய் வாங்கும் தகுதியுடைய அட்டைதாரர்களுக்கு, கடந்த ஏப்., மாதத்திற்கான மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை.

மேலும், மே மாதம் பிறந்து, 6 நாட்களாகியும் இம்மாதத்திற்கான மண்ணெண்ணெயும் இதுவரை வழங்கவில்லை.

இதனால், மண்ணெண்ணெய் வாயிலாக விறகு அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ரேஷன் கடையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை 15.30 ரூபாய்க்கு வாங்கியவர்கள், வெளிச்சந்தையில், 100 ரூபாய் செலவழித்து வாங்க வேண்டிய பரிதாப நிலை வேண்டியுள்ளது.

எனவே, காஞ்சிபுரம் தாலுாகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடையில் மே மாதத்திற்கான மண்ணெண்ணெயை விரைந்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி கூறியதாவது:

காஞ்சிபுரம் தாலுாகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளுக்கு கடந்த மாதம் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்வது தாமதமாகிவிட்டது.

தற்போது, மே மாதத்திற்கான மண்ணெண்ணெய் வழக்கத்தைவிட ஒதுக்கீடு அளவு அதிகரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மண்ணெண்ணெய் அனுப்பும் பணி நடந்து வருகிறது.

ஓரிரு நாட்களில் காஞ்சி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement