அதிகாரிகளுக்கு தரவே வாங்கினேன் கைதான 'லஞ்ச' உதவியாளர் வாக்குமூலம்

நாகர்கோவில்:குளத்தில் மண் எடுக்க, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை ஊழியர், அதிகாரிகளுக்கு கொடுக்கவே பணம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தண்ணீர் வற்றிய குளங்களில் மண் எடுக்க கலெக்டர் அழகு மீனா அனுமதி வழங்கியுள்ளார். எனினும், அதிகாரிகள் மட்டத்தில் லஞ்சம் கொடுத்தால் தான், மண் எடுக்க முடிகிறது என, விவசாயிகளும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், திருவட்டார் அருகே புளியமூடு பகுதியை சேர்ந்த விவசாயி பிரைட், 52, அருவிக்கரை கிராமத்தில் பெருங்குளத்திலிருந்து மண் எடுக்க அனுமதி கோரி, செருப்பாலுார் பொதுப்பணித்துறை உட்கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அலுவலக உதவியாளர் ஜஸ்டின் ராஜ் என்பவர், உதவி பொறியாளர் போல் நடித்து, பாஸ் வழங்க, 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து, பிரைட் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டுகளை பிரைட், பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜஸ்டின்ராஜிடம் கொடுத்தார்.

பணம் வாங்கிய ஜஸ்டின்ராஜை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது. உயர் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக தான் பணம் வாங்கியதாக ஜஸ்டின் ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுபற்றியும் விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement