அவிநாசி தேர்த்திருவிழா

ஸ்ரீநடராஜ சுவாமி, கூனம்பட்டி திருமடம்

கொங்கு நாட்டின் மகுடம் அவிநாசி. திருவாரூர் தேருக்கு அடுத்ததாக, பெரியதேராக இருப்பது அவிநாசித்தேர். 'கோவில் விளங்க குடி விளங்க' என்று கூறுவது போல், கோவில்வழிபாடு, திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடினால், தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும்.பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர். வயோதிகர், மாற்றுத்திறனாளிகள் வர முடியாது என்பதால், இறைவனே தேரில் திருவீதியுலா சென்று, அவர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தேர்த்திருவிழா நடத்துவது மிகவும் கடினமானது; அவன் அருள் இருந்தால் மட்டுமே, தேர்த்திருவிழா நடத்த முடியும். கொடிமரம் அலங்கரித்து, அஷ்டபலி பூஜையுடன் விழா துவங்கியுள்ளது. இறைவன் தேரில் எழுந்தருளி, நகர்வலம் வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்; அவிநாசிக்கு நிகர் அவிநாசியேதான்; வேறு இல்லை. தேர்த்திருவிழாவில் பங்கேற்று அவிநாசியப்பர் அருளுக்கு பாத்திரமாகலாம்.

ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம்

மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகாயம், யாத்திரை ஆகிய சிறப்பு மிகுந்த கொங்கு நாட்டில், வரலாற்று சிறப்பு மிகுந்தது திருப்புக்கொளியூர்; பாவம் போக்கும் அவிநாசி. ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று கூறுவதை போல், இறைவழிபாடு முக்கியமானது. இறைவன் எவ்வளவு சோதனை வந்தாலும், நம்மை ஆட்கொண்டு அருள்கின்றான்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர் வழிபாட்டுக்காக, தேர்த்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. தேர்த்திருவிழாவில், தேர் இழுப்பது பிறவிப்பணியை போக்கும். பக்தர்களை தீமைகள் அண்டாமலிருக்க, புண்ணியம் தரும் தேர்த்திருவிழாவில் பங்கேற்று இறையருளை பெறலாம்.

Advertisement