மக்களுடன் முதல்வர் முகாம்: கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் முகாம் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக தற்போது மூன்றாம் கட்டமாக விளிம்பு நிலையிலுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில், நாளை மற்றும் வரும், 9,ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டம் நடக்கிறது.

நாளை கள்ளக்குறிச்சி ஒன்றியம் நீலமங்கலம், தென்கீரனுார், சிறுவங்கூர், பெறுவங்கூர் மற்றும் தியாகதுருகம் ஒன்றியம் முடியனுார் ஆகிய கிராமங்களிலும், வரும், 9,ம் தேதி கூத்தக்குடி, வடதொரசலுார், குடியநல்லுார் மற்றும் கள்ளக்குறிச்சி ஒன்றியம் தென்சிறுவலுார், சின்னசேலம் ஒன்றியம் நயினார்பாளையம் ஆகிய கிராமங்களில் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த முகாமை சிறப்பாக நடத்திடும் வகையில் துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள், ஆன்லைன் பதிவேற்றம், பொதுமக்களுக்கு தேவையான இருக்கைகள் அமைத்தல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கப்பட்டது.அத்துடன் பெறப்படும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, தனித்துணை ஆட்சியர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement