சென்னப்பட்டணாவுக்கு கூடுதல் நிதி: சிவகுமார்

ராம்நகர் :“சென்னப்பட்டணா தொகுதிக்கு என் துறைகள் மூலம் 158 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவேன்; தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் வழங்குவேன்,” என, துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.

சென்னப்பட்டணாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

இடைத்தேர்தலுக்கு முன்பு சென்னப்பட்டணாவுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கினோம். சில பணிகள் தாமதமாக நடக்கின்றன. இதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னப்பட்டணா தொகுதிக்கு என் துறைகள் மூலம் 158 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவேன். தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் வழங்குவேன். இந்த தொகுதி மேம்பாடு அடைய வேண்டும் என்பது என் விருப்பம்.

நானும், யோகேஸ்வரும் சேர்ந்து சென்னப்பட்டணா தொகுதியின் பிம்பத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறோம். நாங்கள் இருவரும் வேலை செய்யவில்லை என்று, மத்திய அமைச்சர் குமாரசாமி சொல்கிறார். விமர்சனம் செத்துவிடும்; வேலை நீடித்து இருக்கும்.

பிடதியின் டவுன்ஷிப் கட்ட வேண்டும் என்று அறிவித்தவர் குமாரசாமி தான்.

அரசியல் காரணத்திற்காக இப்போது மாற்றிப் பேசுகிறார். டவுன்ஷிப் திட்டத்தை கைவிடும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு, முன்னாள் பிரதமர் தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார்.

யார் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும். டவுன்ஷிப் திட்டம் கைவிடப்படாது.

நான் இந்த மாவட்டத்தின் மகன். இங்கு உள்ள விவசாயிகள் துயரம், வலிகளை கேட்கிறேன். ராம்நகர், தன் கர்ம பூமி என்று சொல்லும் குமாரசாமி என்ன செய்தார்?

இவ்வாறு கூறினார்.

Advertisement