பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் வினியோகம்

கோவை :கோவை மாவட்டத்தில் உள்ள, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான, பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வினியோகப் பணிகள் தொடங்கி உள்ளன.

கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட 170-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டிற்கான புத்தக வினியோகம் நேற்று (மே 6) முதல் தொடங்கியுள்ளது.

கல்வி அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்களிலிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தோராயமாக 5 லட்சம் புத்தகங்கள் வினயோகிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் இம்மாதம் இறுதி வரை நடைபெறும்.

அதோடு, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, அரசு வழங்கும் நலத்திட்டப் பொருட்களான புத்தக பை, சீருடை, ஷூ-, சாக்ஸ், கணித உபகரண பெட்டி (ஜியோமெட்ரி பாக்ஸ்) ஆகியனவும் வினியோகிக்கப்படுகின்றன.

பள்ளிகள் அனுப்பிய தேவைக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டு, புத்தகங்களும் நலத்திட்டப் பொருட்களும், அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தேவைகள் அதிகரித்தாலும், போதிய அளவில் பொருட்கள் இருப்பு உள்ளதால், வினியோகப் பணிகள் தாமதமின்றி நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement