மோசமான அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்க மாநகராட்சி மேயர் ஆய்வு
கோவை : மாநகராட்சி பகுதிகளில் புதிதாக, அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாக, மேயர் நேற்று ஆய்வு செய்தார்.
குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி தரும் அங்கன்வாடி மையங்கள் பல, 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாக உள்ளன. சிமென்ட் ஓட்டில் செயல்படும் இந்த மையங்களிலும் பயிலும் குழந்தைகள், மழைக்காலங்களில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்; மோசமான கட்டடங்களில் பயத்துடன் பயில்கின்றனர்.
இதுதொடர்பாக, 'ஆபத்தான சூழலில் அங்கன்வாடிகள்!' என்ற தலைப்பில் நமது நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி, புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில், மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக அங்கன்வாடி மையங்கள் அமைப்பது தொடர்பாக, மேயர் ரங்கநாயகி நேற்று ஆய்வு செய்தார்.
செல்வபுரம், முத்துசாமி நகர், கல்லாமேடு, பள்ளிவாசல் வீதி, மாதா கோவில் வீதி ஆகிய பகுதிகளில் பழுதடைந்த அங்கன்வாடி மையங்களை, புதுப்பித்து கட்டுவது தொடர்பாகவும், போத்தனுார், டெக்ஸ்சிட்டி பகுதியில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு செய்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.