சூறை காற்றுடன் மழை: மக்கள் மகிழ்ச்சி 'அக்னியை' அணைத்த 'வருண பகவான்'

திருப்பூர், : கடந்த மார்ச் மாதம் முதலே கோடை வெயில் வாட்டி வருகிறது. காலை, 7:00 மணிக்கே தலைகாட்டும் வெயில், நேரம் செல்லச்செல்ல அதிகரித்து, மதியம், 12:00 மணிக்கு உச்சி வெயில் மண்டையை பிளக்கிறது. இரவு நேரங்களிலும் உஷ்ணமான சீதோஷ்ண நிலையே நிலவுகிறது.

கடந்த, 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியது. தகிக்கும் வெயிலால், பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள், மதிய வேளைகளில் பயணிப்பதையே தவிர்த்து வருகின்றனர். மக்களின் தாகம் தீர்க்க, தனியார் அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் திறந்து வருகின்றனர். தெருவோரம், கம்பங்கூழ், நீர் மோர் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பானங்கள்; தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெற்றுவருகிறது.

வெயிலுக்கு இதமாக, கோடை மழை பெய்யாதா என மக்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். திருப்பூர் நகர பகுதிகளில், நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கம் போல் வெயில் வாட்டியது. மாலைநேரம், வானிலை சட்டென்று மாறியது.

காற்று, புயலாக சுழன்றடித்தது. மாலை, 4:00 மணிக்கு, நகர பகுதி முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்யத்துவங்கியது. மழையால், தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, குமரன் ரோடு, காங்கயம் ரோடு, பி.என்., ரோடு உள்ளிட்ட பிரதானை சாலைகள் உள்பட அனைத்து வீதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இரவு நேரம் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை பாதிப்பு



l கல்லம்பாளையம் ரயில்வே சுரங்கப்பாலத்தில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. டூவீலரில் சுரங்கப்பாலத்தை கடக்க முயன்ற நபரை, வெள்ளம் இழுத்துச்சென்றது. இதனை பார்த்த அப்பகுதிமக்கள், அந்நபரை மீட்டனர். இருப்பினும், பைக் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

l பார்க் ரோட்டில், வெள்ளி விழா பூங்கா அருகே, சுரங்க பாலம் பணிக்காக, தகர ஷீட்களால் மறைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக, தகர ஷீட்டுகள் சரிந்து விழுந்தன.

l சுழன்றடித்த காற்றுக்கு, ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ராம்நகர் நான்காவது வீதியில், பெரிய வேப்பமரம் ஒன்று அடியோடு முறிந்து விழுந்தது.

l குமரன் ரோடு, டவுன்ஹால் பகுதியில் மழைநீர் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கியது. இதனால், அவ்வழியே வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

l நஞ்சப்பா பள்ளி வளாகத்தில், வாகை மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

l தாராபுரம் ரோடு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன், மரம் முறிந்து, மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால், பலவஞ்சிபாளையம் துணைமின் நிலையத்திலிருந்து சப்ளை செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அவசர நிலை கருதி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 10 நிமிடத்தில் மின் தடை சரி செய்யப்பட்டது.

விழுந்த மரத்தை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒருமணிநேரத்தில் மற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

Advertisement