விதி மீறும் அரசியல் கட்சியினர் கொடிகளை கட்டி 'விளையாட்டு'
திருப்பூர் : போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், பொதுமக்களை பொருட்படுத்தாமலும் அரசியல் கட்சியினர் கொடிகளை கட்டி அத்து மீறுவது திருப்பூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகரப் பகுதிகளில் ரோடுகளின் மையத்தடுப்புகள், பாலங்கள், மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள் ஆகியவற்றில் கொடிகளை கட்டக் கூடாது என விதிமுறை உள்ளது.ஆனால், அரசியல் கட்சியினர், அமைப்புகள் இதில் எதையும் பொருட்படுத்துவதில்லை.
தங்கள் கட்சி அல்லது அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தலைவர்கள் வருகை என்றால் இவர்கள் முதலில் ஆக்கிரமிப்பது பொது இடங்கள் தான். கொடிகள் கட்டியும், பேனர் வைத்தும் பாலங்கள், மையத்தடுப்புகள், மின் கம்பங்கள், ரவுண்டானாக்கள் என காணும் இடமெங்கும் தங்கள் கொடிகளை கட்டி வைத்து விடுகின்றனர்.
இதில், எந்த அரசியல் கட்சியும் சளைத்ததாக இல்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதாக இல்லை. ஒரு காலகட்டம் வரையில், ரயில்வே மேம்பாலம் மீது கொடிகள் கட்டுவது தவிர்க்கப்பட்டு வந்தது.
சில நாட்களாக அதனையும் விட்டு வைக்காமல் கொடிகளை கட்டத்துவங்கியுள்ளனர். ரயில்வே துறையினரும் கண்டு கொள்வதில்லை. இதேநிலை தான் நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி இடங்களிலும் கொடிகளை கட்டுவது அதிகரித்து வருகிறது.
நெருக்கடி மிகுந்த நகர ரோடுகள், போக்குவரத்து ரவுண்டானாக்கள், மையத்தடுப்புகள் என விதிகளை கண்டு கொள்ளாமல் கொடிகளை கட்டுகின்றனர். இதனால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படும் அவதி குறித்தும் இவர்கள் கவலைப்படுவதில்லை.
எனவே, துறைவாரியாக அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்.