பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் ஓ.கே.,! திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி
திருப்பூர்: இந்தியா - பிரிட்டன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், இந்திய ஜவுளி ஏற்றுமதி துறை ஏற்றம் பெறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்திய ஏற்றுமதிக்கு, பிரிட்டன் மிக முக்கியமான மற்றும் பாரம்பரிய சந்தையாக உள்ளது. அந்நாட்டுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்தியா - பிரிட்டன் இடையே வரியில்லாத வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 2022ல் துவங்கி நடைபெற்றுவந்தது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது, இந்திய ஏற்றுமதியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி., ) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்தியா - பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு இதயப்பூர்வ வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இரு நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம், இந்திய ஜவுளி ஏற்றுமதி துறை மற்றும் சங்கிலித்தொடரில் உள்ள துறைகளுக்கு பலம் சேர்க்கும்.
பிரிட்டன் சந்தைக்கான ஏற்றுமதியில் நிலவிய வர்த் தக தடைகள் விலகி, புதிய வாய்ப்புகள் தேடிவரும். இதன்மூலம், ஜவுளித்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகுவதற்கான சூழல் உருவாகும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டிலேயே, 50 ஆயிரம் கோடி ரூபாயை எட்டுவதற்கு இந்த ஒப்பந்தம் பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.