குமாரசாமியின் உடல்நிலை வதந்திக்கு நிகில் முற்றுப்புள்ளி

மாண்டியா : மத்திய அமைச்சர் குமாரசாமியின் உடல் நிலை மோசமாக உள்ளதாக வதந்தி பரப்பப்பட்ட நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக நிகில் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி மூன்று முறை இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில், உடல்நிலை பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது, அவரது உடல்நலம் குறித்த கேள்வியை எழுப்பியது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

நேற்று முன்தினம் மாண்டியா, பெட்டஹள்ளி கிராமத்தில் உள்ள சோமேஸ்வரசுவாமி கோவிலின் பிரதிஷ்டை விழாவில், ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:

என் தந்தையின் உடல் நிலை குறித்து சமீப காலமாக நிறைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. இவையெல்லாம் உண்மை இல்லை.

சோமேஸ்வரர் முன்னிலையில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கடவுளின் அருளாலும், அவரது தந்தையின் ஆசிர்வாதத்தாலும், முக்கியமாக உங்கள் அனைவரின் அன்பாலும் அவரது உடல் நிலை சீராக உள்ளது.

அவரது உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்று மீண்டும் ஒரு முறை உறுதியாக கூறுகிறேன். எனவே, இது குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை.

குமாரசாமி 2வது முறை முதல்வராக இருந்தபோது, மாண்டியாவிற்காக 200 கோடி ரூபாய்க்கு மேலான பாசன திட்டங்களை செய்து உள்ளார். அவர் மாண்டியாவின் மேம்பாட்டுக்கு உண்மையாக பாடுபட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement