உயர் நீதிமன்ற உத்தரவால் தப்பிய தேவிகுளம் எம்.எல்.ஏ., தேவிகுளம் எம்.எல்.ஏ.,வுக்கு நிம்மதி

மூணாறு, : தேவிகுளம் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ராஜா வெற்றி பெற்றதை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அவர் எம்.எல்.ஏ.வாக தொடரலாம் எனவும் உத்தரவிட்டது.

தேவிகுளம் தனித் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த ராஜா, காங்கிரஸ் கூட்டணி சார்பில் குமார் போட்டியிட்டனர். அதில் ராஜா வெற்றி பெற்றார்.

கிறிஸ்துவரான ராஜா போலி ஆவணங்கள் மூலம் ஆதிதிராவிடர் என கூறி, தேர்தலில் போட்டியிட்டதாக, கேரள உயர் நீதிமன்றத்தில் 2022 ஜூன் 22ல் குமார் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், ராஜா வெற்றி பெற்றதை ரத்து செய்து 2023 மார்ச் 20ல் நீதிபதி சோமராஜன் உத்தரவிட்டார். ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் அனிருத்தபோஸ், சுதான் சூதுலியா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைகால தடை விதித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் சலுகைகள் பெற தகுதி இல்லை என உத்தரவிட்டனர்.

அந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் ஓஹா, அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது.

அதில் கேரள உயர் நீதிமன்றம், ராஜா வெற்றி பெற்றதை எதன் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த உத்தரவை ரத்து செய்ததுடன் குமார் வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

Advertisement