மேட்டூர் அணையில் நீர் திறப்பு; குறுவை சாகுபடிக்கு பயன் தராது நல்லசாமி கருத்து

திருப்பூர்,: மேட்டூர் அணையில் அடுத்த மாதம் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறுவை சாகுபடிக்கு பயன் தராது; நீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:

சட்டசபையில் பொதுப்பணித் துறை அமைச்சர் பேசுகையில், 'மே மாதம், மேட்டூர் அணை கால்வாய்கள் துார் வாரப்படும்; ஜூன் 12ம் தேதி, குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையில், 107 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. அதனடிப்படையில் நீர் திறப்பை அமைச்சர் அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசு காவிரி நதி நீர் தீர்ப்பின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இது வரை நீர் வழங்கியதில்லை. வெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே காவிரியில் நீர் திறந்து விடுகின்றனர். தற்போது டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு அணையில் திறக்கப்படும் நீர் முழுமையாக பயன்படும் வகையில் போதுமானதாக இருக்கும் எனக் கூற முடியாது. மேலும், நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை தமிழகத்துக்கு குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், நடப்பாண்டு குறுவை சாகுபடி விவசாயிகள் முழுமையாக விளைச்சல் எடுக்க முடியும் என்று உறுதி கூற முடியாது. காவிரி நீர் திறப்பு குறித்த தீர்ப்பில், தினசரி நீர் பங்கீடு என்று உத்தரவு பெற்றிருந்தால் மட்டுமே இதை முறையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பலன் பெற்றிருக்க முடியும். இந்த தீர்ப்பைப் பெறாமல் தற்போதுள்ள இருப்பு அடிப்படையில் நீர் திறப்பு என்பது சூதாட்டம் ஆடுவது போன்று தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement