மாவட்ட வாரியாக கால்நடை எண்ணிக்கை எவ்வளவு? விவரம் வெளியிட எதிர்பார்ப்பு
திருப்பூர்: 'கால்நடை கணக்கெடுப்பு பணி முடிந்துள்ள நிலையில், மாவட்ட வாரியாக உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை கடந்தாண்டு, அக்., மாதம் துவங்கி, இந்தாண்டு ஏப்., வரை நடத்தியது. இதில் ஒவ்வொரு வீடுகள், வீடுகள் அல்லாத வியாபார நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களிலும், கால்நடை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கென பயிற்சி பெற்ற கால்நடை கணக்கெடுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகள் துவங்கி, விவசாய உபகரணங்களும் கணக்கெடுக்கப்பட்டன.
இந்நிலையில், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தெரு நாய் கடிக்கு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகியுள்ள நிலையில், அதுதொடர்பான கணக்கெடுப்பும், கால்நடை பராமரிப்புத்துறையினர் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைப்பினர் பலர், அரசு எடுத்த கணக்கெடுப்பை காட்டிலும் இரட்டிப்பு எண்ணிக்கையில் கால்நடைகள்பலியாகியுள்ளன எனக் கூறி வருகின்றனர்.
இத்தகைய சூழலில், கால்நடைகள் கணக்கெடுப்பின் வாயிலாக மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட விவரங்கள், கால்நடை வளர்ப்போரின் விவரங்கள், வளர்க்கப்படும் கால்நடைகள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.