காங்., வினய் குல்கர்னிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு,: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, ஐஸ்வர்யா கவுடா கைது செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னிக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

மாண்டியா மலவள்ளி கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 34.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, பல நகைக்கடைகளில் நகை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்தார்.

இவரது வங்கிக் கணக்கிற்கு, 3 மாதத்தில் 50 கோடி ரூபாய் வந்தது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா கவுடாவின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டார். ஐஸ்வர்யா கவுடா, தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி இடையில் பணப்பரிமாற்றம் நடந்ததையும், அமலாக்கத்துறை கண்டுபிடித்து இருந்தது.

இதுதொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி, வினய் குல்கர்னிக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அவர் நேற்றே விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டும். சொந்த வேலை இருப்பதாக கூறி ஆஜராகவில்லை.

விசாரணையின்போது அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என்றால், வினய் குல்கர்னி கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட, வினய் குல்கர்னி தற்போது ஜாமினில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement