ஜெல்லி மிட்டாய், ஜிலேபியில் செயற்கை ரசாயனங்களா?

பெங்களூரு: குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ஜெல்லி மிட்டாய், சாக்லேட் உள்ளிட்டவற்றில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்டறிய உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, சில உணவுப் பொருட்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. 'பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், குழந்தைகள் விரும்பக்கூடிய ஜெல்லி மிட்டாய், சாக்லேட், ஜாம், ஜிலேபி உள்ளிட்டவற்றிலும் செயற்கை நிறமிகள் கலக்கப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதை தீவிரமாக எடுத்துக் கொண்ட உணவுத்துறை அதிகாரிகள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் ஆலோசனை நடத்தினர்.

ஆணையம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, அடுத்த சில நாட்களில் சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement