அவிநாசி தேர்த்திருவிழா.

அகிலம் போற்றும் அவிநாசி தேரோட்டம்!

கொங்கு மண்டலத்தில், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மை சிறப்பு வாய்ந்தது, திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில்.அவிநாசியப்பரை மட்டுமே, அரிய பொருள் என்று சொல்கிறார் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர். எதற்காக அரியபொருள் என்கிறார் என்றால், காசிக்கு நிகரான அவிநாசி என்பதால். தான். பொதுவாக, அவிநாசியை, காசிக்கு நிகரான தலம் என்று கூறுகிறோம்.

காசி விஸ்வநாதர் என்ற பெயரில், தமிழகத்தில் பல சன்னதிகள் உள்ளன. அவிநாசி அப்படியானது அல்ல; காசி விஸ்வநாதரின் சுயம்பு லிங்கத்தின் அடியில் இருந்து வேர் பரவி வளர்ந்து, அவிநாசியில் சுயம்புவாக எழுந்தருளியது; அன்னை பார்வதியும் பூஜித்தாள் என, தல வாரலாறு கூறுகிறது. அவிநாசி என்றாலும் காசியேதான்; இறைவனே உகந்து வந்து அருளாட்சி புரியம் புண்ணிய பூமி அவிநாசி.

'திருப்புக்கொளியூர்'

பிரபஞ்சம் அழிந்தபோதும் கூட, 1,008 சிவாலயங்களில் சில அழியாமல் இருந்தன. இருப்பினும், பிரம்மா, விஷ்ணு உட்பட, முப்பத்து முக்கோடி தேவர்களும், 'எங்கே ஒளிந்துகொள்வது' என்று பரமேஸ்வரின் கேட்டு, அழிவில்லாத அவிநாசித்தலத்தில் வந்து ஒளிந்தனர்; அதனாலேயே, திருப்புக்கொளியூர் என்ற திருநாமம் பெற்று விளங்குகிறது.

குருபக்தியும், சிவபக்தியில் சிறந்த சிவனடியார்களுக்கு, சுந்தரமூர்த்தி நாயனார் வாயிலாக சிவனருளும் கிட்டியது. திருத்தலத்தில், முதலையுண்ட மழலையை, நான்கு நான்கு ஆண்டுகள் கழிந்து, ஏழு வயது சிறுவனாக மீட்டுத்தந்தது, அவிநாசியப்பரின் பேரருள்.

ஆதி அந்தமில்லா

அருட்பெருஞ்சோதி

திருப்புக்கொளியூர், அவிநாசித்தலத்து பெருமைகளை, 'ஸ்கந்த புராணத்தில், சிவமான்மிகய காண்டன் எனும் பகுதியில், 60 அத்தியாயங்கள் எடுத்துரைக்கிறது. அதை, இளையான் கவிராயர், தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதன்மூலமாக, ஆதி அந்தமில்லா அருட்பெருஞ்சோதியான அவிநாசியப்பரின் அருமை, பெருமைகளை சிவனடியார் அறிகின்றனர்.

அவிநாசி தலத்தின் சிறப்பு

ஜோதியாய் நின்ற சிவனின் அடி, முடி காணும்போட்டியில் பிரம்ம தேவர் பொய்யுரைத்ததால், அவிநாசியில் 100 ஆண்டுகள் சிவபூஜை நடந்தி, படைக்கும் தொழிலை மீண்டும் பெற்றார்; அதன்மூலமாக, இழந்ததை மீட்டுத்தரும் ஈடு இணையில்லா சிவத்தலம் என்ற பெருமையை அவிநாசி பெற்றது. இந்திரனின் ஐராவதம் வெள்ளையானை, சாப விமோசனத்துக்காக அவிநாசியப்பரை வழிபட்டு, பேறு பெற்றது. அரக்கியாகிய தாடகை, அவிநாசியப்பரை வேண்டி, புத்திரப்பேறு பெற்றனர். வியாதன் என்ற வேடன், பாலாபிேஷகம் செய்து புத்திரப்பேறு பெற்றான். நாகலோகத்தில் இருந்து வந்த நாகக்கன்னி நற்கதி அடைந்தாள். சங்க கண்ணன் என்ற வேடனும், தேவலோக ரம்பையும், அவிநாசித்தலத்தில் சிவபூஜை செய்து சாபம் நீங்கி, பேறு பெற்றனர். தவறான எண்ணத்துடன் சிவாலயம் புகுந்து, புராணகதை கேட்டு சென்ற எஞ்ஞகுத்தன் என்பவர் முக்தி பெற்றார்.

வடவாட்டில், கவுதம நிதிக்கரையில் இருந்தசதுமுகபுரம் என்ற நகரை ஆண்ட தருமசேன மன்னன், அவிநாசியப்பரை தொழுது புத்திரப்பேறு பெற்றான். சுந்தரமூர்த்திநாயனார், சிவபெருமானை வேண்டி, முதலையுண்ட மழலையை மீட்டுத்தந்த வரலாறும், அவிநாசியப்பருக்கு உண்டு. உமையம்மையுடன், தேவாதிதேவர், அசுரர், வேடன், வியாபாரிகள் முக்தியடைந்தது பலருக்கும் தெரியும். வாயில்லா ஜீவன், அவிநாசித்தலத்தில் முக்தி பெற்று, தீர்க்க துண்டன் என்ற பெயருடன் சிவகனமாக இருக்கும் பேறு பெற்றது.

துருவாச முனிவர்

திருமுருகன்பூண்டி வந்திருந்த, துருவாச முனிவர் பிண்டம் வைத்து பிதுர்களுக்கு தரப்பணம் செய்தார். காகத்துக்கு வைத்த சோற்றுருண்டையை, காகம் ஒன்று கவ்வியபடி, தனது குஞ்சுக்காக எடுத்துச்சென்றது. மற்றொரு காகம் அதை தட்டிப்பறிக்க முயற்சித்த போது, சோற்றுருண்டை, சிவனடியாரின் திருவோட்டில் விழுந்தது. அவரும் சிவபூஜை செய்து உண்டு பசியாறினார்.

அங்கிருந்து, தனது குஞ்சுக்காக மீண்டும் உணவு தேடி பறந்த காகம், வேடனின் கல் பட்டு அவிநாசியிலேயே மடிந்தது. காகம், தேவ உருவம் பெற்று, கயிலாயம் சென்று வழிபட்டு நின்றது. திருப்புக்கொளியூர் திருத்தலத்தில், சிவனடியாருக்கு உணவு வழங்கியதால், தீர்க்க துண்டன் என்ற பெயருடன் சிவகனமாக இருக்கும் அந்தஸ்தை வழங்கினார் சிவபெருமான்.

சிவபாக்கியம் கிட்டும்

ஏழை, பணக்காரர் என்று மட்டுமல்ல, எவ்வித வேறுபாடும் இல்லாமல், எல்லா உயிரினங்களுக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் முக்கி அளிப்பார் என்கிறது தல புராணம். வாயில்லா ஜீவனுக்கும், தவறான நோக்குடன் கோவிலுக்கு சென்று திரும்பியவனுக்கும் கூட, சிவபாக்கியம் கிட்டும்.

நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை போரேற தேறியைப் புக்கொளி யூரவிநாசியைக் காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே!

என்று, சுந்தரமூர்த்திநாயனார் சிறப்புடன் பாடிய பதிகத்தை, மும்மை சிறப்பு வாய்ந்த அவிநாசி திருத்தலத்தில், அவிநாசி ஆளுடையாரை பாடித்துதித்து, இழந்ததை மீட்டுத்தரும் இறைவனை வேண்டி, நலம்பெற வாழ்ந்து நற்கதி பெறலாம்!

கொங்கேழு திருத்தலங்கள்

சிவபெருமானை போற்றிப்பாடிய, பாடல் பெற்ற தலங்கள் 276; அவற்றில், கொங்கு நாட்டில் உள்ள திருப்புக்கொளியூர், திருமுருகன்பூண்டி, பவானி, திருப்பாண்டி கொடுமுடி, கரூர் ஆனிலை, திருச்செங்கோடு, வெஞ்சமாகூடல் ஆகிய ஏழுதலங்கள் உள்ளன; அவற்றில் முதன்மையானது அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். 'விநாசம்' என்றால், அழியாதிருப்பது என்று அர்த்தம்; அவிநாசி என்பதற்கு, அழியாதிருப்பது என்பது பொருள். அவிநாசி என்பதற்கு அழியாத்தன்மை கொண்ட தலம் என்பது பொருள். இங்குள்ள இறைவனை வழிபட்டால், மீண்டும் பிறவாநிலை ஏற்பட்டு, அழியாப்புகழ் கிடைக்கம் என்பது நம்பிக்கை.

அரிய பொருளே அவிநாசியப்பா

மாணிக்கவாசகர், மதுரையில் இருந்தபடியே அவிநாசியப்பரை பாடியுள்ளார். 'அரிய பொருளே அவிநாசியப்பா... பாண்டி வெள்ளமே' என்று பாடியுள்ளார்.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்

'இறவாமல் -பிறவாமல் எனையாள் சற்குருவாகி' என்று அவிநாசி தலத்தில் உள்ள செந்திலாண்டவர் மீது பாடியுள்ளார். அதுமட்டுமல்ல, 'திருப்புக்கொளியூருடையார் புகழ் தம்பிரானே' என்று அவிநாசியப்பரையும் போற்றியுள்ளார். திருநாவுக்கரசரின் தேவார பாடலில், 'அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்' என்று அவிநாசியப்பரை பாடியிருக்கிறார்.

சுந்தரர் பாடிய அவிநாசி பதிகம்

'எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே' என்று துவங்கும், அவிநாசி பதிகம் பாடியவர், இப்பதிகங்களை பாடி அவிநாசியப்பரை வழிபட்டால், துன்பமே இருக்காது என்றும் மெய்யுருக பாடியிருக்கிறார்

தேவாதி தேவர்களும் வழிபட்டனர்

பிரம்மதேவர், 100 ஆண்டுகள் இங்குள்ள சிவனை வழிபட்டுள்ளார். வெள்ளையானை 12 ஆண்டுகளும், தாடகை மூன்று ஆண்டுகளும், நாக கன்னிகை, 21 மாதங்களும், வியாதவேடன், 30 நாட்களும், சங்கண்ணன், ஐந்து நாட்களும், ரம்பை ஒரு நாளும், காகம் ஒரு ஜாமமும், எக்ஞகுப்தன் ஒரு முகூர்த்த நேரமும் இறைவனை வழிபட்டு, பேறு பெற்றனர் என வரலாறுகள் கூறுகின்றன.

சோமாஸ்கந்த மூர்த்தம்

சிவாலயங்கள், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் நடுவே, முருகப்பெருமான் சன்னதி இருப்பது போன்ற சோமஸ்கந்த முகூர்த்தமாக அமைக்கப்படும். அவிநாசியில், பார்வதி தேவி, வலப்பாகம் பெற்று கோவில் கொண்டிருந்தாலும், இடையே முருகர் சன்னதியுடன், சோமாஸ்கந்த மூர்த்தத்துடன் புகழ்பெற்றதாக அமைந்துள்ளது.

திருமாளிகை பத்தி

ராஜ்யம் ஆண்ட மன்னர்கள் பலரும், செய்தது போல், தற்போதும் கருங்கல் திருப்பணி நடந்து வருகிறது. அம்மன் சன்னதியை அடுத்துள்ள தென்புற திருமதிலை ஒட்டியபடி, 18 கருங்கல் துாண்களுடன், திருமாளிகை பத்தி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

சாப தோஷம் நீக்கும் தலவிருட்ஷம்

பார்வதி தேவி, தவம் இருக்கும் கோலத்தில், அவிநாசி திருத்தலத்தில், பாதிரி மரத்தம்மன் என்ற பெயரில் வழிபாட்டில் இருக்கிறார். அதே வளாகத்தில், பாதிரி மரம் உள்ளது. சாப தோஷம் மற்றும் பில்லி, சூனிய பாதிப்பு இருப்பவர்கள், பாதிரி மரத்தை வழிபட்டு நிவர்த்தி பெறலாம். !ஓம் நமசிவாய' எனும் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி, தலவிருட்சமாக உள்ள பாதிரி மரத்தையும், அம்மனையும் வழிபட்டால், சாபதோஷம் நீங்கி சுபிட்ஷம் பெறலாம்.

ஆறு தீர்த்தங்கள்

அழிவில்லா அருட்கடாட்ஷம் மிகுந்த அவிநாசி திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களும் முக்கியமானவை. காசிக்கங்கை தீர்த்தம், தெப்பக்குளம், நாகக்கன்னிகை தீர்த்தம், திருநள்ளாறு, தாமரைக்குளம், ஐராவதரத்துறை ஆகிய தீர்த்தங்கள் இங்குள்ளன.

ஐராவதம் உருவாக்கிய குளம்

சாபம் பெற்ற இந்திரனின் யானையான ஐராவதம், அவிநாசி வந்து தவம் இருந்தது; தனது தந்தத்தால் குளம் உருவாக்கி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அந்த குளமே, கருணாம்பிகை அம்மன் சன்னதியின் எதிரே உள்ள, நான்கு புறமும் கருங்கல் படிகள், நீராழி மண்டபத்துடன் காட்சியளிக்கும் தெப்பக்குளம். தெப்பக்குளம், செல்லங்க சமுத்திரம், சந்திர புஷ்கரணி, அமராவதி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இழந்ததை மீட்டுத்தரும் அவிநாசியப்பர்

அவிநாசியப்பரை வணங்கும் அடியார்களுக்கு, நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியுமாக, வாழ்வில் வளர்ச்சி ஏற்படும். இழப்புகளை மீட்டுக்கொடுத்து, நல்வாழ்வு அருளும் ஆற்றல், அவிநாசிப்பரிடம் மட்டுமே இருப்பதும் தனிச்சிறப்பு. காசி விஸ்வநாதர் எப்படி, அவிநாசி தலத்தில் அவிநாசியப்பராக அருள்பாலிக்கிறாரோ, அதேபோல், கங்கை தீர்த்தமும் காசி கிணறு வடிவில் அவிநாசியில் இருக்கிறது. கங்கை தீர்த்தம் பல இடங்களில் இருந்தாலும், அவிநாசியில் மட்டுமே, கங்கை தீர்த்தமே, காசி கிணறாக, ஒவ்வொரு பொழுதும், அருள்பொங்க நிற்கிறது. காசி கிணறும், கங்கை தீர்த்தமும் ஒன்றுதான்; இரண்டுமே ஆதியாக, மூலமாக இணைப்பு பெற்றதும், அவிநாசிக்கு ஒரு தனி சிறப்பு. 

Advertisement