எத்னால் ராஜினாமா எப்போது? சிவானந்தா பாட்டீல் கேள்வி!

விஜயபுரா : “எம்.எல்.ஏ., பதவியை, பசனகவுடா பாட்டீல் எத்னால் ராஜினாமா செய்வது எப்போது?,” என, அமைச்சர் சிவானந்தா பாட்டீல் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பசனகவுடா பாட்டீல் எத்னால் சவாலை ஏற்றுக்கொண்டு, என் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தேன். அந்த கடிதத்தை நான் நிபந்தனையுடன் எழுதி இருப்பதாக, எத்னால் கூறுகிறார்.

என் கையெழுத்து போட்ட வெற்று கடிதத்தை அவரிடம் கொடுக்கிறேன். அவர் அதில் என்ன வேண்டும் என்றாலும் எழுதிக் கொள்ளட்டும்.

அவர் எப்போது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வார்? விஜயபுரா தொகுதியில் போட்டியிட நான் ஆர்வமாக இருக்கிறேன்.

முகமது நபிகள் பற்றி பேசிய எத்னாலை கண்டித்து, விஜயபுராவில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கு, விஜயபுரா மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.பி.பாட்டீல் வரவில்லை என்று, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும்போது தான் சொன்னேன்.

என்னை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள், 'போராட்டத்திற்கு, எம்.பி.பாட்டீல் கண்டிப்பாக வருவார். நீங்களும் வர வேண்டும்' என்று கூறினர். ஆனால் எம்.பி.பாட்டீல் வரவில்லை. முஸ்லிம் தலைவர்களிடம் பொய் கூறினரா?

இந்த விஷயத்தில் என்னை கண்டிக்கும் விதமாக, எம்.பி.பாட்டீல் பேசுவது சரியல்ல. மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் அவர் கண்டிப்பாக போராட்டத்திற்கு வந்திருக்க வேண்டும்.

பெலகாவியில் நடந்த முதல்வர் நிகழ்ச்சிக்கு சென்றதாக கூறுகிறார். நானும் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். ஆனாலும் போராட்டத்திலும் கலந்து கொண்டேன்.

பசவண்ணரை பற்றி யாராவது ஏதாவது பேசினால், நமக்கு கோபம் வருவது போன்று, முகமது நபிகள் பற்றி பேசினால், முஸ்லிம்களுக்கு கோபம் வருவது இயல்பு தான்.

விஜயபுரா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒற்றுமையாக இல்லையா என்பது பற்றி நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். எதற்கு எடுத்தாலும் பாகிஸ்தான், முஸ்லிம்கள் என்று கூறுவதை, பா.ஜ., முதலில் நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement