அழிவிலும் அழியா அவிநாசி தலம்

தென்னாடுடைய சிவன், எந்நாட்டவர்க்கும் இறைவனாய் இப்புவியில் உறையும் 1,008 சிவாலயங்களில், 108 தலங்கள் சிறப்பு பெற்றவை. அதிலும், 68 தலங்கள் தனித்துவம் பெற்றவை. அவற்றுள், சுயம்புவாக, காசிலிங்காகவே பெருமை பெற்ற ஒரே திருத்தலம் அவிநாசி.

ஒருமுறை சூதமா முனிவரிடம், கங்கை கடலோடு கலக்கும் நைமிசாரண்யத்தில் வசிக்கும் முனிவர்கள், 'பாம்பு தரும் பதுமராகத்தை காட்டிலும் ஒளிவிடும் பொருள் ஏது; சந்திரனைவிட குளிர்சசி தருவது எது: அமுதைவிட சுவையானது எது; காசியைவிடவும் மேம்பட்ட தலம் உண்டோ' என கேட்டார்களாம். அந்த கேள்விக்கு, சூதமா முனிவர், 'தென்திசையில் அழிவிலும் அழிவில்லாத அவிநாசித்தலமே' என்று சொன்னாராம். ஏழு திசைகள் சிதைந்தாலும், நிலையான வாழ்வுதரும் தவமான தனி ஊர், சிவ கயிலாயத்துக்கு நிகரான இயல்புடைய ஊர், 'புக்கொளி' என்னும் திரு அவிநாசி புகழ்பெற்ற மூதுார் என்கிறார், தலபுராண ஆசிரியர் இளையான் கவிராயர்.

அவிநாசி என்றால், எக்காலத்திலும் அழிவு இல்லாதது என்று பொருள். மண்ணுலகில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு சிவத்தலங்கள் பிரளய காலத்தில் அழியாத சிறப்பு உடையவை. ஆனால், அவற்றுள்ளும் அவிநாசிக்கு தனி ஏற்றம் உண்டு. உமையவளை பிரிந்து சென்று தவமிருக்க பணித்த சிவன், சங்கரா காலத்தில் ஊழித்தீ தாண்டவம் ஆடுகிறார். பிரம்பா, விஷ்ணு முதலான தேவர்கள் எல்லோரும் ஊழித் தீ யின் வெம்மை தாங்காது, எங்கே சென்று அடைக்கலம் புகுவது என சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமானோ, 'பூலோகத்தில், என்றும் அழிாத தலமாகிய அவிநாசிக்கு சென்று இருங்கள்' என்றார். உடனே விண்ணுலகத்தார் ஓடிவந்து, அவிநாசியல் புகுந்து ஒளிந்து அடைக்கலம் பெற்றதால், அவிநாசிக்கு, 'திருப்புக்கொழியூர்' என்கிற புராண பெயர் உண்டாயிற்று.

வாருங்கள், திருப்புக்கொளியூர் நாதன் தாள் பணிவோம். நமது முன்வினைப் பதிவுகளும், அறிந்தும், அறியாமல் செய்த பாவங்களெல்லாம் அழிந்துபோகும். நம்மை என்றும் அழிவில்லாமல் வாழச்செய்யும்.

Advertisement