ஆசிரியை கொலைக்கு பழிக்கு பழி விவசாயியை கொன்றவருக்கு வலை

மாண்டியா: மாண்டியா அருகே, ஆசிரியை கொலைக்கு பழிக்கு பழியாக விவசாயி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியையின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
மாண்டியாவின் பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ், 35. இவரது மனைவி தீபிகா, 28. இவர், மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி வேலைக்கு சென்ற தீபிகா, வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நான்கு நாட்கள் கழித்து அவரது உடல், மேலுகோட் நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் மாணிக்யனஹள்ளி கிராமத்தின் நிதிஷ், 22, கைது செய்யப்பட்டார். தீபிகாவும், நிதிஷும் நெருக்கமாக பழகி வந்தனர். ஆனால், நிதிஷை தன் தம்பி என்று தீபிகா கூறி வந்தார்.
குடும்பத்தினர் எச்சரித்ததால் நிதிஷுடன் பேசுவதை தீபிகா கைவிட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் தீபிகா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிந்தது.
சிறையில் இருந்த நிதிஷ், சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்தார். நிதிஷ் சகோதரிக்கும், ஒரு வாலிபருக்கும் வரும் 11ம் தேதி தர்மஸ்தாலா மஞ்சுநாதா கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிதிஷ் குடும்பத்தினர் செய்து வந்தனர்.
நேற்று காலை நிதிஷ் தந்தையும், விவசாயியுமான நரசிம்மகவுடா, 57, மாணிக்யனஹள்ளி கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு தீபிகாவின் தந்தை வெங்கடேஷ் வந்தார்.
“என் மகளை உன் மகன் கொன்று விட்டான். உன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டு நரசிம்ம கவுடாவிடம், வெங்கடேஷ் தகராறு செய்தார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரசிம்மகவுடாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே நரசிம்மகவுடா இறந்தார். இதை பார்த்து தேநீர் கடைக்கு வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவல் அறிந்த பாண்டவபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நரசிம்மகவுடா உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள வெங்கடேஷை தேடி வருகின்றனர்.
பழிக்கு, பழியாக நடந்த இந்த கொலை, மாணிக்யனஹள்ளி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.