ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை வழக்கு காதல் விவகாரத்தில் நண்பரே கொன்றது அம்பலம்

கிளாம்பாக்கம்:வண்டலுார் தனியார் கல்லுாரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொலை சம்பவத்தில், காதல் விவகாரத்தில் அவரது நண்பரே தீர்த்துக் கட்டியது, போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது.

ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம், துலுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 27.

இவர், வண்டலுாரில் உள்ள கிரசன்ட் கல்லுாரியில், ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை பணி முடித்து, கல்லுாரியில் உள்ள போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் உறங்கினார்.

அப்போது, காலை 7:45 மணியளவில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அரிவாளால் சராமாரியாக இவரை வெட்டியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிளாம்பாக்கம் போலீசார், கல்லுாரி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், அதே கல்லுாரியில் ஓட்டுநராக வேலை பார்க்கும் வீரபத்ரன் மற்றும் அவரது நண்பர் முத்து இருவரும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, கீரப்பாக்கம் பகுதியில் மறைந்திருந்த வீரபத்ரன், முத்து ஆகிய இருவரையும், போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட மணிகண்டனும், வீரபத்ரனும் நெருங்கிய நண்பர்கள். வீரபத்ரன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் அவர், தன் காதலியை மணிகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன் பின், அதே பெண்ணை மணிகண்டனும் ஒருதலையாக காதலிக்க துவங்கி உள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை காதலிக்கும்படி, அந்த பெண்ணை மணிகண்டன் வற்புறுத்தி உள்ளார்.

இந்த விவகாரம் வீரபத்ரனுக்கு தெரியவர, மணிகண்டனை கண்டித்துள்ளார். ஆனால், மணிகண்டன் தன் காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வீரபத்ரன், தன் நண்பர் முத்து என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, மணிகண்டனை தீர்த்துக்கட்டி உள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினார்.

Advertisement