கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சையால் 9 விரல்களை இழந்த இளம் பெண் டாக்டர் மீது வழக்கு பதிவு

திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் அழகு சாதன மருத்துவமனையில் கொழுப்பு அகற்றும் அறுவை சிகிச்சைக்கிடையே இளம் பெண் 9 விரல்களை இழந்தார். இதைத்தொடர்ந்து டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்தவர் நீது 31. திருவனந்தபுரத்தில்மென்பொருள் நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார். இந் நிலையில் தனது வயிற்றுப்பகுதியில் இருந்த கொழுப்புகளை நீக்குவதற்காக திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதி தனியார் அழகு சாதன மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கடந்த 22 - ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறுநாள் வீடு திரும்பிய நிலையில் வாந்தி மயக்கம் என உடலில் பல பிரச்னைகள் ஏற்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்தது. இதைத்தொடர்ந்து அவரது கணவர் பத்மஜித் ,அம் மருத்துவமனையை தொடர்பு கொண்ட போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அடுத்த நாள் வரும்படி தெரிவித்தனர்.

ஆனால் நீதுவின் உடல்நிலை மிகவும் மோசமானதால் வேறொரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் இடது காலில் ஐந்து விரல்களும், இடது கையில் நான்கு விரல்களும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து நீதுவின் கணவர், கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தார். அழகு சாதன மருத்துவமனையின் உரிமையாளரான டாக்டர் பிபிலாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டது.

அறுவை சிகிச்சை நடைபெற்ற போது ரத்தத்தில் கொழுப்பு கலந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement