இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

56

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


@1brபயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து பாகிஸ்தான், நமது நாட்டு ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.


தாக்குதல் துவங்கியது முதல் இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. சீனாவும் அதேபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தது. இரு நாடுகளும் விரைவில் பதற்றத்தை தணிக்கும் என நம்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

நன்றி



இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன். அறிவுப்பூர்வமாக செயல்பட்ட இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

பாக்., அறிவிப்பு



பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டு உள்ளன. பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், போர் நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பாராட்டுகள்



அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர், இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் ஆசிம் மாலிக் ஆகியோருடன் கடந்த 48 மணி நேரமாக நானும், துணை அதிபர் வான்சும் தொடர்ந்து ஆலோசனை நடத்தினோம்.

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் பல்வேறு பிரச்னைகள் குறித்து பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. பிரதமர்கள் மோடி மற்றும் ஷெரீப் ஆகியோரை, அவர்களின் அமைதிக்கான பாதையை தேர்வு செய்வதில் அவர்கள் காட்டிய பொறுமை, அறிவு மற்றும் தலைமைப்பண்புக்காக பாராட்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் மார்க் ரூபியோ தெரிவித்து உள்ளார்.

நன்றி



அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் வெளியிட்ட அறிக்கையில், மார்க் ரூபியோ உள்ளிட்ட அதிபரின் குழுவினர் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். போர் நிறுத்தம் ஏற்பட கடுமையாக உழைத்த இந்தியா , பாகிஸ்தான் தலைவர்களுக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.

Advertisement