பேரமனுார் ரயில்வே கேட் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மறைமலைநகர்:மறைமலை நகர் அடுத்த பேரமனுார் -- திருக்கச்சூர் சாலை 5 கி.மீ., துாரம் உடையது.

இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், தர்னீஸ்கொயர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.

இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் பேரமனுார் பகுதியில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இதில், தண்டவாளங்கள் செல்லும் பகுதியில் சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் வெளியே தெரிகின்றன.

கரடுமுரடாக உள்ள இந்த சாலையால், வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

ரயில்வே கடவுப்பாதையை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.

இந்த பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயங்குவதால், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் தடுமாறி கீழே விழும் நிலை தொடர்ந்து வருகிறது.

எனவே, இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement