குண்டு என கூறி கிண்டல்: 20 கி.மீ. துரத்தி நண்பர்களை துப்பாக்கியால் சுட்ட நபர்

கோரக்பூர்; உ.பி.யில், குண்டாக இருப்பதாக கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த நபர், தமது 2 நண்பர்களை 20 கி.மீ., தொலைவு துரத்திச் சென்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
உ.பி.யில், தர்குலஹா தேவி கோவிலில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அர்ஜூன் சவுகான் என்பவர் வந்துள்ளார். அவருடன் உறவினர் ஒருவரும் வந்துள்ளார்.
இவர்களுடன், அர்ஜூன் சவுகான் நண்பர்கள் அனில், சுபம் ஆகியோரும் கோவிலுக்கு வந்திருந்தனர். விழாவில் அவர்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது, அனில், சுபம் இருவரும், அர்ஜூன் சவுகானின் உடல் பருமனை பற்றி கேலியாக பேசியதாக தெரிகிறது.
அவர்களின் கிண்டல் பேச்சை கேட்ட அங்கிருந்தவர்களும் நகைத்ததாக கூறப்படுகிறது. இதனால் தாம் அவமானப்படுத்தப்பட்டதாக ஆத்திரம் அடைந்த அர்ஜூன் சவுகான், இந்த விஷயத்தை தமது மற்றொரு நண்பனான ஆசிப் என்பவரின் பகிர்ந்து இருக்கிறார்.
இதற்கு பழிவாங்க இருவரும் திட்டமிட்டு, அனில், சுபம் ஆகியோர் எங்கு செல்கின்றனர் என்று கண்காணித்தனர். அப்போது, அவர்கள் மன்ஜாரியா என்ற பகுதியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை நடுவழியில் நிறுத்த முயற்சித்த போது, அதை மீறி இருவரும் வாகனத்தில் அதிவேகத்தில் பறந்து சென்றனர்.
கிட்டத்தட்ட அவர்களை 20 கி.மீ., தொலைவு துரத்திச் சென்று பிடித்து, காரில் இருந்து வெளியே இழுத்துப் போட்டனர். பின்னர் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கியால் சுட்ட அர்ஜூன் சவுகானை போலீசார் கைது செய்தனர்.
