போர் நிறுத்தம் தொடர்பாக பார்லி சிறப்பு கூட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம், பார்லி சிறப்புக் கூட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூகவலைதள பதிவில் கூறியதாவது:
போர் நிறுத்தம் குறித்து முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டது. ஆகவே, இப்போது முன்பை விட அதிகமாக, பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தலைமை தாங்கி அரசியல் கட்சிகளின் நம்பிக்கையை பெற வேண்டும்
போர் நிறுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு விளைவுகளை விவாதிக்கவும், எல்லைப் பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு நிலை குறித்து தெளிவுபடுத்தவும், தற்போதைய நிலை குறித்து அரசு விளக்கமளிக்கவும் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் அந்த பதிவில் கூறியுள்ளார்.





