பாகிஸ்தானியர்களின் குருட்டு நம்பிக்கையை அடித்து நொறுக்கிய 'ஆபரேஷன் சிந்தூர்'

புதுடில்லி: 'தங்கள் நாட்டிடம் அணு ஆயுதம் இருக்கிறது; இந்தியாவால் தங்களை எதுவும் செய்ய முடியாது' என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொண்டிருந்த பாகிஸ்தானியர்களின் எண்ணத்தை உடைத்து நொறுக்கி இருக்கிறது இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் அதிரடி தாக்குதல்.
வங்கதேச போருக்கு பிறகு, நேரடியாக இந்தியாவில் போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த பாகிஸ்தான், பயங்கரவாதம் என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தது. அதனால் இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம். பயங்கரவாதிகளுக்கு பணமும், ஆயுதமும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து அனுப்பி வைப்பதை பாகிஸ்தான் ராணுவமும் உளவுத்துறையும் பல்லாண்டுகளாக செய்து கொண்டே இருக்கின்றன. பாகிஸ்தானின் இந்த தகிடுதத்தம், உலக நாடுகள் எல்லோருக்கும் தெரியும்.
அடைக்கலம்
தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பினருக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்ததை உலகமே அறியும்.
ஒவ்வொரு முறையும் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் போதெல்லாம், 'எங்களுக்கு எதுவும் தெரியாது; அதெல்லாம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை' என்று தட்டிக் கழிப்பது பாகிஸ்தானின் வழக்கம். இனியும் அத்தகைய பொய் பித்தலாட்டம் செய்து தப்பிக்க முடியாது என்று உணர்த்தும் வகையில், இந்த முறை இந்திய ராணுவம், 9 இடங்களில் நேரடியாக அதிரடி தாக்குதல் நடத்திவிட்டது.
மரம், செடி,கொடி...!
புல்வாமா தாக்குதல் நடந்த போது பாகிஸ்தானுக்கு பதிலடி தருவதற்காக, இந்திய விமானப்படை பாலக்கோட் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அந்த தாக்குதலை பாகிஸ்தான் கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை. மரம், செடி,கொடிகள் மீது இந்திய விமானங்கள் குண்டு வீசி சென்றதாக கூறியது. ஆனால் இந்த முறை பாகிஸ்தானுக்கு அப்படிச் சொல்வதற்கான வாய்ப்பு எதையும் இந்திய ராணுவம் விட்டு வைக்க வில்லை.
துல்லியமாக தாக்குதல்!
ஒவ்வொரு இலக்கும் துல்லியமாக குறி வைத்து தாக்கப்பட்டது. பயங்கரவாதி மசூத் அசாரின் தலைமை அலுவலகமாக செயல்பட்ட இடம் மிகத் துல்லியமாக தாக்கப்பட்டது. இதில் அவனது உறவினர்கள், உதவியாளர்கள் என 14 பேர் கொல்லப்பட்டனர். இதை அவனும் ஒப்புக் கொண்டுள்ளான். இந்திய ராணுவம், பயங்கரவாதிகளை குறி வைத்து நடத்திய தாக்குதல் மிகத் துல்லியமானது என்பதற்கு இதுவே சாட்சி.
55 ஆண்டுகளுக்குப் பின்...!
கடைசியாக 1971ம் ஆண்டு வங்கதேச போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தானை தோற்கடித்தது. அந்தப் போரில் பாகிஸ்தான் ராணுவத்தின் 92 ஆயிரம் வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரண் அடைந்தனர். உலகில் மிகவும் அவமானகரமான தோல்வியை பாகிஸ்தான் ராணுவம் சந்தித்தது. அது நடந்து 55 ஆண்டுகள் கடந்துவிட்டன.
வயது முதிர்ந்த பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமே அந்த நினைவுகள் இன்னும் இருக்கும். அந்த தோல்வியை, இப்போதைய பாகிஸ்தான் இளம் தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய பாகிஸ்தானியர்களுக்கு, இந்தியாவுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குருட்டு நம்பிக்கை!
பாகிஸ்தானியர்கள் பலரும், 'தங்கள் நாட்டிடம் அணுகுண்டுகள் இருக்கின்றன. இந்தியாவால் இப்போது தங்களை எதுவும் செய்து விட முடியாது' என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்தனர்.
அவர்களுக்கு, சர்வ வல்லமை பொருந்திய இந்திய ராணுவத்தால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுவது போல் நேற்றைய ஆபரேஷன் சிந்தூர் அமைந்துவிட்டது. அணு குண்டுகள் இருந்தாலும் இந்தியா தாக்குதல் நடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
25 நிமிடத்தில்...!
அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் பஞ்சாப் மாகாணத்தை தான் பாகிஸ்தான் தனது இதயமாக பார்க்கிறது. அங்கு 4 இடங்களில் இந்தியா குண்டு வீசி அதிர வைத்துள்ளது. அதுவும் 100 கிலோ மீட்டர் உள்ளே புகுந்து பஹவல்பூரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளின் தலைமை முகாமை சுக்குநூறாக்கி விட்டது. வெறும் 25 நிமிடத்தில் 9 இடங்களையும் தூள் தூள் ஆக்கி விட்டது. அதே போல் இந்தியா குறி வைத்து தாக்கிய இடங்கள் எல்லாமே மிகவும் முக்கியமானவை.
தேடி பிடித்து தரைமட்டம்!
ஒரே நேரத்தில் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் தாக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக, பஹல்காம் தாக்குதலுக்கு மட்டும் இன்றி, இதற்கு முன்பு நடந்த புல்வாமா, மும்பை உட்பட பல தாக்குதல்களில் இந்தியா மிச்சம் வைத்த பயங்கரவாதிகளின் கூடாரங்களையும் இந்த முறை நம் ராணுவம் பந்தாடி பழிதீர்த்து விட்டது.
எந்த முகாம்களில் எல்லாம் இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் போடப்பட்டதோ, அவற்றை எல்லாம் புலனாய்வு அமைப்புகள் உதவியுடன் தேடி பிடித்து தகர்த்து இருக்கிறது. இவ்வளவு சிறப்புகள் இருப்பதால் தான் ஆப்ரேஷன் சிந்தூர் கடைசி 55 ஆண்டில் இந்தியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.







மேலும்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!
-
கேரளாவில் கார், டெம்போ மோதி கோர விபத்து: காரில் வந்த 4 பேர் உடல்நசுங்கி பலி
-
காஷ்மீர் பிரச்னையில் யாரின் மத்தியஸ்தமும் அவசியமில்லை: டிரம்புக்கு இந்தியா பதிலடி